Thursday, April 10, 2008

சமூக நீதியின் மாபெரும் வெற்றி... (தீர்ப்பின் முழு நகல் இணைக்கப்பட்டுள்ளது)

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை (உயர் வருவாய் பிரிவினர்) சேர்க்கக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த கல்வியாண்டில் இந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.

இந்த தடையை நீக்க வேண்டும், வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இடைக்காலத் தடையை நீக்க மறுத்த தலைமை நீதிபதி, அரசியல் சாசன பெஞ்சுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். இந்த பெஞ்ச் தனது விசாரணையை மேற்கொண்டது. இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி மத்திய அரசின் சட்டம் சரியானதே என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில், கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கூர், ரவீந்திரன் ஆகியோர் மத்திய அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தனர்

ஒரு நீதிபதி எதிர்ப்பு:

நீதிபதி தல்வீர் பண்டாரி மட்டும் செல்லாது என தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், அடிப்படைக் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் 21ஏ பிரிவின் கீழ் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு சாதகமாக இருந்ததால் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தம் செல்லும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சட்டம் பொருந்தாது. மேலும், அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது விருப்பப்படி நடந்து கொள்ளலாம்.
- முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாரிசுகளை கிரீமி லேயர் பிரிவில் சேர்க்க வேண்டும்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்தம், அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 93வது திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - தட்ஸ்தமிழ்.காம்
அனைவருக்கும் சமமான கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்நிலை ஏற்படுத்தவே சமூக நீதிக்கான போராட்டம் தொடங்கப்பட்டது. பெரியார் தொடங்கிவைத்த வைத்த போராட்டமும் அதற்கான அரசியல் சட்ட திருத்தமும் இன்று ஒரு மையில்கல்லை எட்டி இருக்கிறது. ஆம் அந்த தொடர் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைமுறையினரால் எடுத்து செல்லப்பட்டு இன்று மாபெரும் வெற்றியை "உயர்கல்விகளில் பிற்படுத்தபட்டோருக்கான 27% இடஒதிக்கீடு செல்லும்" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அடைந்திருக்கிறது.

இந்த அற்புதாமான தருணத்தில் நம் விடிவெள்ளி அய்யா பெரியார் அவர்களை வணங்கி, பல தடைகளை கலைந்து, எதிர்கொண்டு போராடிய அர்ஜுன்சிங், பா.ம.க, திமுக மற்றும் அனைத்து நல்ல உள்ளத்துக்கும் நன்றியினை காணிக்கையாக்குவோம்.

தீர்ப்பின் முழு நகலை படிக்க கீழே சொடுக்கவும்...


வாழ்க சமூக நீதி... வாழ்க மக்கள்...

0 comments: