Sunday, March 09, 2008

சிறு துளிகளின் சுனாமி...


ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியை எதன் கொண்டும் தடுக்க இயலாது என்பது உண்மை தான் போலும்... இந்த ஆண்டு நமக்கு இந்த செய்தியை உரக்க சொல்லியபடியே தொடங்கி இருக்கிறது.... உலகின் எல்லா திசைகளிலும் வஞ்சிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட இனங்களின் பேரளுச்சி நம் கண் முன்னே விரிய தொடங்கி இருக்கிறது... ஊமைகளின் கேள்விகளுக்கு காலம் நிதானமாய் பதில் எழுத ஆரம்பித்திருக்கிறது...

௧. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன.

1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக்கொண்டு யூகோசுலேவியா குடியரசிலிருந்து பிரிந்து சென்றன.

1992ம் ஆண்டு போசுனியா விடுதலை முழக்கம் செய்தது. எஞ்சிய செர்பியா, மான்டோனக்ராஆகியவை மடடுமே யூகோசுலேவியாவில் நீடித்தன. செர்பிய ஆதிக்க இனத்தினரால் கொசோவோ மக்கள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்தனர். ஆதலால் 2 கோடி பேர் கொண்ட கொசோவா செர்பியாவிலிருந்து பிரிந்து தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொள்ள பல ஆண்டுகளாக போராடி வந்தது.





இந்நிலையில் கடந்த பிப்ரவரி மதம் பல உலக நாடுகள் அதை தனி நாடக அங்கீகரித்து விட்டன. உலக வரைபடத்தில், புதிய தேசம் ஒன்று உருவாகி விட்டது.கொசோவோ என்ற அந்த இளைய தேசம் சுதந்திரப் பிரகடனம் செய்து தன்னை இறைமை உள்ள தனிநாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.



௨. பணிரேண்டவது மலேசியா தேர்தல் நேற்று நடைபெற்றது.மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற இடத்துக்கும், 13 மாநிலங்களுக்கும் வாக்கு பதிவு நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

மலேசிய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு பேர் இந்திய மற்றும் சீன வம்சாவளியினர் ஆவர். இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான். இரு இனத்தவருமே கல்வி, வேலைவாய்ப்பில் தங்களை மலாய் இனத்தவர் புறக்கணித்து வருவதாக நீண்ட காலமாகவே புழுங்கிக் கொண்டுள்ளனர். கடந்த வருடம் தமிழர்கள் தங்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்று அமைதியாய் போராடிய பொழுது அன்றைய ஆளுங்கட்சி மிக கடும் நடவடிக்கை எடுத்து போராட்டகாரர்களை ஒடுக்கியது. மிக கடுமையான நடவடிக்கைகளில் சினுபான்மை இன மக்களுக்கு எதிராக அவ்வரசு இயங்கியது. இந்நிலையில் நடந்த தேர்தலில் அந்நாடு விடுதலை அடைந்த முதல் 50 வருடமாக தனி பெரும்பான்மையுடன் ஆண்டுவந்த ஆளுங்கட்சி இந்த முறை பலத்த அடி வாங்கி உள்ளது. ஆட்சி அமைக்க முடிந்தாலும் பல மாநிலங்களின் அது இழந்துள்ளது, இது அக்கட்சிக்கு மிக பெரும் பின்னடைவு. அங்கே வாழும் சிறுபான்மையினர் அனைவரும் ஆளும் அரசுக்கு எதிராக வாக்களித்து தங்களின் பலத்த எதிர்ப்பை காடிவிட்டனர். மீண்டும் அவர்களே இனி ஆட்சிக்கு வந்தாலும் எந்த முடிவையும் நாடாளுமன்றத்தில் அவர்கள் தானாக எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. அருதி பெரும்பான்மை இல்லாததால் எந்த முடிவு எடுத்தாலும் அவர்களுக்கு எதிர்கட்சிகளின் தயவும் தேவை என்னும் நிலைமை ஆகிவிட்டது.


௩. மிக பெரும் பாரம்பரியம், வரலாறு கொண்ட நாடு அமெரிக்கா. இந்த டாலர் தேசம் எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்ற தேசமாக உலகுக்கு தன்னை உயர்த்தி காட்டிகொண்டிருக்கிறது. ஆனால் இந்த வெளிச்சத்துக்கு பின்னே எத்தனையோ அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்க்கையும் அவர்களது விசம்பல்களும் பல நூற்றாண்டுகளாக இருந்துகொண்டே இருக்கிறது.
இத்தாலி ஜெனோவா வை சார்ந்த கொலம்பஸ் 1492ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் கால் வைக்கிறார், அன்றில் இருந்து அதுவரை இருந்த அந்நாட்டு சரித்திரம் மாற தொடங்கியது. அமெரிக்காவின் வளத்தை பார்த்து ஐரோப்பியர்கள் அமெரிக்கா மீது படை எடுக்க தொடங்கினார். அதுவரை அங்கே வாழ்ந்துவந்த உண்மை அமெரிகார்களான சிவப்பு இந்தியர்களை ஐரோப்பியர்கள் அழிக்க தொடங்கினார். ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது அமெரிக்கா. அதே நேரத்தில் ஆப்ரிக்க கண்டத்திலும் படை எடுத்து வளங்களை கொள்ளை அடித்தனர் ஐரோப்பியர்கள். அப்போது தான் அடிமை முறை ஆரம்பம் ஆனது. நல்ல உடல்கட்டும், உழைப்பும் கொண்ட ஆப்ரிகார்களை அமெரிக்காவிற்கு அடிமைகளாக நாடு கடத்தியது. மக்களின் நிறம் அடிமைத்தன குறியீடாய் நிறுவப்பட்டது. எல்லா சமூக நடவடிக்கைகளிலும் கறுப்பர்கள் ஒடுக்கப்பட்டு மூன்றாம்தர குடிகளாய் நடத்தப்பட்டனர். ௧௫00 ஆரம்பித்த இந்த நிற வேறுபாடு பல நூற்றாண்டு தொடர்ந்து இன்று வரை நிலவி வருகிறது. இதை போக்க பல தலைவர்கள், பல போராட்டங்கள், பல இன்னல்கள் என காலம் ஓடிகொண்டே இருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் 56வது அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் போட்டியிடபோகின்றனர். அத்தேர்தலுக்கு முன்னதாக அதிபர்க்கு போட்டியிட கட்சிக்குள் நடக்கும் தேர்தலில் ஜனநாயக கட்சியில் இந்த முறை முன்னால் அதிபர் கிளின்டன் மனைவி ஹில்லரி கிளிண்டனும், இல்லினுஸ் மாநில செனட்டர் பார்க் ஒபமாவும் போட்டியிடுகின்றனர். இதுவரை நாடு முழுவதும் நடந்த இந்த உட்கட்சி தேர்தலில் ஒபாமா முன்னிலையில் இருக்கிறார். அவர் தான் அடுத்த அதிபராய் வர வாய்ப்பு இருப்பாதாக தெரிகிறது. அமெரிக்கா இதுவரை அந்த இனத்துக்கு செய்த அநீதிகேல்லாம் அவரை அதிபராக்கி பாவம் கழுவி கொள்ளபோகிறது. எந்த இனம் இந்தனை நூற்றாண்டுகளாய் அடிமையாய், ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, நாதியற்று இருந்ததோ.. அந்த கறுப்பினத்தை சாந்தவர் தான் ஒபாமா. அப்படியே ஹில்லரி வென்றாலும் இதுவரை அதிபர் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பெண் இனத்தை சார்ந்தவர். ஆக இந்த தேர்தலில் இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா புதிய வரலாறு படைக்க போகிறது.

ஐரோப்பிய நாடுகளை ஒட்டிய கொசாவோவாகட்டும், கிழக்காசிய சார்ந்த மலேசியாவாகட்டும், மேலைநாடு அமெரிக்கவாகட்டும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களில் விடுதலை போராட்டம் அடுத்த தளத்துக்கு நகர்ந்திருக்கிறது. பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியாவிலும் சிறுபான்மை சீக்கிய இனத்தை சார்ந்தவர் தான் பிரதமர், ஒடுக்கப்பட்ட பெண் இனத்தை சார்ந்தவர் தான் ஜனாதிபதி. ஜனநாயகம், உலக நாடுகள், பிற இன மக்கள் என அனைத்தும் அவர்களின் உண்மையான ஜீவாதார போராட்டத்தை அங்கீகரித்து, காது குடுத்து கேட்க ஆரம்பித்திருக்கின்றன. இது மிக பெரும் மாற்றம். இதில் ஒரு பகுதியாக உலக நாடுகளும், சர்வதேச சமூகமும் இலங்கையின் சிறுபான்மை தமிழ் ஈழமக்களின் ஜீவாதார போராட்டத்தையும், ஆதிக்க இலங்கை அரசின் அட்டுளியத்தை புரிந்துகொண்டு தமிழீழம் மலர துணை இருந்தால் வரலாற்றின் பக்கங்களில் இது பொன்னான காலம் என கருதலாம்.

ஆக மொத்தத்தில் இந்த ஆண்டு உலகின் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் எழுச்சி ஆண்டாக அறிவிக்கலாம்.


0 comments: